18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகளை நிறுத்த அதிரடி உத்தரவு

உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் அனைத்து மருந்து தயாரிப்புகளையும் நிறுத்துமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல்…

உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் அனைத்து மருந்து தயாரிப்புகளையும் நிறுத்துமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளி மருந்தை உட்கொண்ட சுமார் 70 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் இந்தியாவைச் சேர்ந்த மரியன் பயோடெக் என்ற தனியார் மருந்து நிறுவனத்தின் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

கடுமையான காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்த அந்நாட்டு குழந்தைகள் DOK -1 MAX என்ற மருந்தை உட்கொண்டதும் உயிரிழந்துவிட்டதாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்தது. மேலும் அவற்றில் உடலுக்கு கேடு செய்யும் ரசாயனங்கள் கலந்திருந்ததாகவும் உஸ்பெகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

இதன் எதிரொலியாக, நொய்டாவில் உள்ள மரியன் பயோடெக் நிறுவனத்தில், உத்தரப்பிரதேச மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. மருந்து தயாரிப்பு நெறிமுறைகளை மரியன் பயோடெக் நிறுவனம் மீறியிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்துமாறு உத்தரப்பிரதேச மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஆணை பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.