டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 100வது ஐபிஎல் போட்டியாகும்.
இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ், 3 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது. 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் நான்கு போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது.
டாஸ் தோற்றது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் “டாஸ் தோற்றது நல்லதுதான். நாங்கள் முதலில்தான் பேட்டிங் செய்ய விரும்பினோம்” என்றார்.
டாஸ் வென்ற சுப்மன் கில் “இது சிறந்த ஆடுகளம் போன்று தெரிகிறது. நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளில் சிறந்த வகையில் சேஸிங் செய்தோம்” என தெரிவித்துள்ளார்.







