கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம், கூகுள் தேடுபொறி தளத்துக்குப் போட்டியாக ஒரு புதிய தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி தளம். வேறு பல தேடுபொறி தளங்கள் இருந்தாலும்…

ஆப்பிள் நிறுவனம், கூகுள் தேடுபொறி தளத்துக்குப் போட்டியாக ஒரு புதிய தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி தளம். வேறு பல தேடுபொறி தளங்கள் இருந்தாலும் கூகுள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிளின் ஐபோன், மேக் உள்ளிட்ட சாதனங்களில் வழக்கமான தேடுபொறியாக கூகுள் இருந்து வந்துள்ளது. இதற்காக கூகுள் பெரும் தொகையுடன் ஆப்பிள் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் இருந்து வருகிறது.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக ஒரு தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட் மற்றும் டக்டக்கோ (DuckDuckGo) என்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து பிங் (bing) தேடுபொறியை வாங்க நினைத்தது. எனினும் இறுதியாக கூகுளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்நிலையில் கூகுளின் தொழில்நுட்பங்களை ஆப்பிள் கையகப்படுத்த, கூகுளின் முன்னாள் ஊழியர் ஜான் ஜியானன்ட்ரியாவை ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. இவர் ஐஓஎஸ் மற்றும் மேக் ஓஎஸ் தளத்தில் ‘பெகாசஸ்’ என பெயரிடப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் தேடுபொறியை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் இதற்காக செயற்கை நுண்ணறிவு, தேடல் தொழில் நுட்பங்களில் அதிக முதலீடு செய்துள்ளது.

கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் குறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆப்பிள் தளங்களில் கூகுள் தேடுபொறியை பயன்படுத்த கூகுள் பல கோடி ரூபாயை செலவழித்ததாகவும், தற்போது ஆப்பிள் புதிய தேடுபொறியை உருவாக்குவதால் இது கூகுளுக்கு கவலையளிப்பதாகவும் அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஏனெனில் ஆப்பிள் புதிய தேடுபொறியை உருவாக்கும் பட்சத்தில் கூகுளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

எனினும் புதிய தேடுபொறி தளத்தை உருவாக்குவது குறித்து ஆப்பிள் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால், ஒரு தேடுபொறி தளத்தை உருவாக்கும் தொழில்நுட்பங்கள் ஆப்பிளிடம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.