மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல்சீற்றம் காரணமாக மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபாதை சேதமடைந்துள்ளது.
மாண்டஸ் புயல் உருவான காரணத்தால் கடல் அலையின் சீற்றம் கடுமையாக இருப்பதன் விளைவாக, சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்துள்ளது.
மாண்டஸ் புயலின் காரணமாக நேற்று முதல் சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில்
கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று புயல் நிலைகொண்டிருக்கக் கூடிய தொலைவு குறைந்து கொண்டே வருவதால் கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து கடுமையாக உள்ளது.
இதன் காரணமாக கடற்கரையை ஒட்டி, அலைகள் மோதக் கூடிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நடைபாதை தற்பொழுது சேதம் அடைந்துள்ளது. சுமார் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் முற்றிலும் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட இந்த நடைபாதை, கடந்த மாதம் 27ஆம் தேதி மாற்றுத்திறனாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த நடைபாதை சேதமடைந்துள்ளதை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் புயலுக்குப் பின்னர், இது மீண்டும் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.








