வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு! ரூ.203 அதிகரித்து ரூ.1898-க்கு விற்கப்படும் என அறிவிப்பு!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.203 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.203 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை சமையல் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஒரு சிலிண்டர் ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிய நிலையில் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரூ.200 குறைத்துள்ளது. ரக்ஷாபந்தனை முன்னிட்டு மத்திய அரசின் பரிசாக கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு குறைக்கப்பட்டுள்ள ரூ.200 ரூபாயை மானியத் தொகையாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது. இதனால் ரூ.1118க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.918 -ஆக குறைந்தது.

இந்நிலையில், தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.203 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ரூ.1695 – க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.1,898 – க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஆயினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு இல்லாதது சற்று நிம்மதியை அளித்தாலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை, ஹோட்டல் உணவுகளின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.