அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம் செய்ததை கண்டறிந்த பெற்றோர், பெண்ணின் கணவனை நடுரோட்டில் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை சேர்ந்த இளைஞர் நவீன்குமார் என்பவர், புதுச்சேரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் 21 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு தெரியாமல் கடந்த 9ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அலைபாயுதே திரைப்பட பாணியில் அந்த மாணவி, தாலியை மறைத்து வைத்துக்கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மகளின் நடத்தையில் மாற்றத்தை கவனித்த பெற்றோர் அவருக்கு தெரியாமல் கண்காணித்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த தனது மனைவியை தனியே அழைத்து நவீன்குமார் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை கண்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர், இளைஞரை மடக்கிபிடித்து நடுரோட்டில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் காதல் ஜோடியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து இருவீட்டாரையும் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் மேஜர் என்பதை பெற்றோருக்கு எடுத்துக்கூறி, அவர்களை சேர்த்து வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.







