மணிப்பூர் பாஜக அலுவலகம் அருகே கூடிய கூட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

மணிப்பூர் பாஜக தலைமை அலுவலகம் அருகே திரண்டவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு காணப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க…

மணிப்பூர் பாஜக தலைமை அலுவலகம் அருகே திரண்டவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு காணப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்களுக்கு சலுகைகள் பாதிக்கப்படும் என அவர்கள் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் வெடித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 350 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித்ஷா நேற்று முன்தினம் எடுத்துரைத்தார்.

இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு ராகுல் காந்தி நேற்று 2 நாள் பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் தொடர்ந்து முன்னேறி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் இம்பால் திரும்பினார். 2 நாட்கள் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு போலீசார் தடை விதித்தது நேற்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தலைநகர் இம்பாலில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே திடீரென ஏராளமானோர் திரண்டனர். அவர்களை தடுக்கும் முயற்சியாக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.