பெங்களூரு அணி கடந்த ஆண்டு தனது முதல் ஐபிஎல் கோப்பை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடைபெற்ற பேரணியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் 19-வது தொடர் வருகிற 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அடிப்படையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் பெங்களூரு அணி மோதுகின்றது.
இந்த சூழலில் பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் (KSCA) பெங்களூரு அணியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி, உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 11 இருக்கைகள் நிரந்தரமாக காலியாக விடப்படும் என்றும் சர்வதேசப் போட்டிகள் உட்பட எந்தவொரு ஆட்டத்திற்கும் இந்த இருக்கைகள் விற்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடக்கப் போட்டியை முன்னிட்டு, மைதானத்தின் உள் நுழைவாயிலுக்கு அருகே ஒரு நினைவுப் பலகையைத் திறந்து வைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி போட்டி தொடங்குவதற்கு முன்பு உயிரிழந்தவர்களின் பெயர்கள் மைதானத்தினுள் காட்சிப்படுத்தப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







