பெண்ணுக்குள் இருக்கும் ஆறாத ரணங்கள்; உரக்கப் பேசும் ‘நடபாவாடை’

தமிழ் நாடக சூழலில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களில் முக்கியமான ஒன்றாக ‘நடபாவாடை’ நாடகம் அமைந்துள்ளது. இறப்பு சடங்குகளை செய்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘நடபாவாடை’ நாடகம்.…

தமிழ் நாடக சூழலில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களில் முக்கியமான ஒன்றாக ‘நடபாவாடை’ நாடகம் அமைந்துள்ளது.

இறப்பு சடங்குகளை செய்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘நடபாவாடை’ நாடகம். நம் கண்முன்னே வாழ்ந்துவரும் ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பல ஆறாத ரணங்கள் நிறைந்திருக்கும். அதனை ஏற்றுக்கொண்டே வாழ வேண்டும் என்பது இந்த சமூகம் அவர்களுக்கு அளித்த சாபம். அப்படி, புதுச்சேரி குருவிநத்தம் கிராமத்தில், இறப்பு சடங்குகளை செய்த ஆண்கள் அனைவரும் உயிரிழந்த நிலையில், அந்த குடும்ப பின்னணியை கொண்ட ஒரு பெண் அதே பணிக்குள் தள்ளப்படுகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இறப்பு சடங்குகளை செய்துவரும் அந்த பெண்ணின் வாழ்க்கையை நாடக வடிவில் உருவாக்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கூத்துப்பட்டறையில் நிகழ்த்திக்காட்டினர். அத்தனை உணர்வுகளுடன் அழகுற நிகழ்த்தப்பட்ட இந்த நாடகத்திற்கு பின் உள்ள வெளிப்படை அரங்க இயக்கத்தினரின் அபரிமிதமான உழைப்பு, பெரும் தேடல், நீண்ட கள ஆய்வு பார்வையாளர்களை நாடகத்தினுள் கட்டிப்போட்டது.

நடிகர்கள் மாணிக் சுப்ரமணியன், கலைச் செல்வி மற்றும் அர்ச்சனா மூவரும் தங்கள் நடிப்புத் திறமையால் அனைவரையும் மெய்மறக்க வைத்த தருணங்கள் அத்தனை அழகானவை. 

தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், வாழ்க்கை ஓடத்தை இந்த சமூகத்தில்தான் நகர்த்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட அந்த பெண், குருவிநத்தம் கிராமம் முழுவதும் யார் இறந்தாலும் அவர்களின் இறுதிச் சடங்குகள், அதன் பின்னான சாங்கியங்களை தனி ஒருவராக நடத்தி வருகிறார்.

பெண்கள் சுடுகாட்டிற்கு போகக்கூடாது, பெண்கள் இறப்பு சடங்குகளை செய்யக்கூடாது என்ற வரைமுறைகள் இந்த சமூகத்தில் இன்றும் உயிர்பெற்றிருக்கின்றன. ஆனால், குருவிநத்தம் கிராமத்தில் இறப்பு சடங்குகளை செய்ய யாரும் இல்லை எனும் நிலை வந்தபோது, ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் இணைந்தே அந்த பெண்ணை இறப்பு சடங்குகளை செய்ய அழைத்ததாக கூறும் நாடகத்தின் இயக்குநர் சி.ராமசாமி, இந்த சமூகம் கட்டமைத்து வைத்துள்ள நெறிமுறைகளையும் கோட்பாடுகளையும் தனது தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் முரண்பாடுகள் குறித்த காத்திரமான உரையாடலை தூண்டும் முயற்சியாகவே இந்த நாடக நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

அவரது வார்த்தைகளில் உண்மை இருக்கிறது, அது இந்த நாடகத்தில் முழுமையாக பிரதிபலித்திருக்கிறது. ஏதோ ஒரு சூழலில் இறப்பு சடங்குகளை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அந்த பெண், அத்தனை இன்னல்களுக்கு இடையே தனது வாழ்வாதாரத்திற்காக இந்த பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாடகத்தை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக இயங்கிய வெளிப்படை அரங்க இயக்கத்தினர் அந்த பெண்ணுடனேயே பயணம் செய்து அவரது செயல்பாடுகளை, அவர் சடங்குகள் செய்யும் முறைகளை கற்றறிந்து அதனை உடல்மொழிக்கான வடிவமாக மெருகேற்றி செவ்வனே நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

அந்த கிராமத்தில் இறப்பு சடங்குகள் மட்டும் செய்பவராக அல்லாமல், அப்பகுதியில் உள்ள மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிறார் அந்த பெண். எவ்வளவு வேலைகளை செய்தாலும் எவ்வளவு உழைத்தாலும், பார்க்கும் வேலையால் ஒருவர் இழிவுபடுத்தப்படும் வழக்கம் மட்டும் இன்னும் மாறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதனை மாற்றும் சிந்தனையை அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டதால்தான் ‘நடபாவாடை’ நாடகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

‘நடபாவாடை’ – இந்த நாடகத்தின் தலைப்பே பலருக்கு புதிதாக இருக்கும். நடபாவாடை போடுவது என்பது இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்லும்போது அவர்கள் செல்லும் பாதையில் வழிநெடுகிலும் சேலைகளை விரித்துக் கொண்டே செல்லும் வழக்கம். இதற்காக மொத்தம் 3 அல்லது நான்கு சேலைகள் மட்டும் வைத்திருப்பார்கள். அதை பெண்கள் வழிநெடுகிலும் விரித்துக் கொண்டு செல்வார்கள். இதனையெல்லாம் குமாரியுடன் வெளிப்படை அரங்க இயக்கத்தினர் பயணித்த நாட்களில் பதிவு செய்து ஒரு முழு ஆவணப்படமாகவே உருவாக்கியுள்ளார் ஷமீம்.

இப்படி நீண்ட பயணத்தின் சாட்சியாக உருவாக்கப்பட்டுள்ள ‘நடபாவாடை’ நாடகம், பார்வையாளர்கள் மத்தியில் குறைந்தபட்சம் இறப்பு சடங்குகள் போன்ற அத்தனை பணிகளை செய்பவர்களையும் சக மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் எந்த வகையிலும் சடங்குகளை ஊக்குவிக்கும் வகையில் நாடகம் உருவாக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் நேர்த்தியாக அமைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் மிகச்சிறப்பு.

நாடகத்தை பார்க்க வருகை தந்த பார்வையாளர்களையும் நாடகத்தின் பங்கேற்பாளர்களாக மாற்றிய இடம் அனைவரிடமும் ஒரு புது உணர்வை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. இறுதியாக நாடகம் குறித்த ஆழமான புரிதல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்த கலந்துரையாடலுடன் நிறைவடைந்தது நாடக நிகழ்வு. சமூகத்தில் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யப்படவேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய உண்மைகளை வெளிக்கொணரும் இதுபோன்ற கலை செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

வசந்தன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.