மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக பாஜக மூத்த தலைவரும், அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றுக் கொண்டார்.
மும்பையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இன்று இரவு 7.30 மணிக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றவர்களுக்கு ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சிவசேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரே மற்றும் சிவசேனா மூத்த தலைவரான மறைந்த ஆனந்த் திகே ஆகியோருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தனது பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டார் ஏக்நாத் ஷிண்டே.
மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்குமாறு முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸிடம் பாஜக மத்திய தலைமை கேட்டுக் கொண்டது என்று அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். அதன் பேரில் அவர் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவரும் அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவீஸ் இன்று மாலை தெரிவித்தார்.

பின்னணி
சிவசேனாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உடனான கருத்து வேறுபாடு காரணமாக தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தார். ஏக்நாத் ஷிண்டே அணி, அஸ்ஸாமில் ஒரு விடுதியில் தங்கியிருந்தது. சிவசேனா எவ்வளவோ முயற்சி செய்தும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மாநிலத்துக்கு திரும்பவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே தரப்பு செய்த முயற்சியும் உச்சநீதிமன்ற உத்தரவால் நிறைவேறாமல் போனது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான கூட்டணி முறித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே ஷிண்டே தரப்பு முன்வைத்த கோரிக்கையாகும்.
ஆனால், அந்தக் கோரிக்கையை உத்தவ் தாக்கரே ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சிவசேனாவுக்கு மிகவும் விசுவாசியாக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அடைந்தது அக்கட்சியினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பரபரப்பான அரசியல் சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை திட்டமிட்டப்படி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருந்தது. ஆனால், அதை சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறியதுடன் தான் எந்தப் பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை என்று தேவந்திர பட்னவீஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரை துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்ளுமாறு பாஜக மத்திய தலைமை தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
-மணிகண்டன்







