தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்:கே.பாலகிருஷணன்!

மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களாக திருத்தம் செய்யப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை…

மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களாக திருத்தம் செய்யப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்தம் செய்யப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை தியாகராய நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கருப்புக் கொடி ஏற்றினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 400 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை என குற்றம்சாட்டினார்.

தடுப்பூசி தயாரிப்பதில் மத்திய அரசு எடுத்த தவறான நடவடிக்கையால் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குறைக்கூறிய அவர், குஜராத் மாநிலத்திற்கு மட்டும் கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குவது ஏன்? இதுபோல் மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதில் ஏன் அக்கறை செலுத்தவில்லை. தமிழகத்தில் 2-வது கொரோனா அலை தீவிரமாக மாறியதற்கு கொரோனா விவகாரத்தில் அதிமுக அரசின் தோல்விதான் இன்றைய நிலைக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய ஜி. ராமகிருஷ்ணன், கொரோனா 2-வது அலையில் மத்திய அரசே 1,40,000 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. ஆனால் அரசின் எண்ணிக்கையைவிட கூடுதலான உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. நாட்டில் போதுமான தடுப்பூசி உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான முயற்சிகளை மத்திய அரசு செய்யாவிட்டால் கொரோனா 3-வது அலையில் கடுமையாக பாதிக்கப்படுவோம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.