புதிய கூட்டணியில் சிபிஎம்…? – பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவுக்கு பெ. சண்முகம் மறுப்பு …!

ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவு கேட்டு யாரும் தங்களை அணுகவில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலையொட்டி தவெக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் பதிவு ஒன்று மூலம் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து இருந்தார். அந்த பதிவில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.

கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.