“தமிழக சட்டப்பேரவை கேள்வி கேட்கும் அளவிற்கு மாறிவிட்டது!” – மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குள்ளாகும் வகையில் மாறிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். இந்தப் பதிலுரையில் சர்க்காரியா கமிஷன், பார்டி ஃபண்ட் குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கை உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி திமுக மீது ஆவேசமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த நிலையில், பட்ஜெட் தொடரின் இறுதி நாளான இன்று சட்டப்பேரவை கூடியதும், முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகரின் உத்தரவுப்படி திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவை ‘சட்டப்பேரவை மாண்புடன் செயல்படுகிறதா?’ என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா என்று நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா, அத்தகைய கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு நடந்து வருகிறது” என்றார்.

தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? என்கிற கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதியாகச் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.