கொரோனா 2வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய நிலவரப்படி 7 ஆயிரத்தை கடந்த பாதிப்பு பதிவானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் 44 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மீண்டும் காணொலி காட்சி மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அரசு தலைமை வழக்கறிஞரிடம், “இரண்டாவது அலை தொடர்பாக நீதிமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதாரத் துறையின் அறிவுரை ஏதும் உள்ளதா” என்று கருத்துக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், கொரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், கொரோனா எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அறுதியிட்டு கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.







