கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் 81 சதவிகிதம் வரை பலனளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகியவற்றுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவாக்ஸின் தடுப்பூசி 80 சதவிகிதம் வரை பலனளிப்பதோடு, லண்டனில் பரவிய புதிய வைரஸை எதிர்ப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவாக்ஸின் தடுப்பூசியின் 3 கட்ட சோதனை முடிவு குறித்து இன்று அறிக்கை வெளியிட்ட பாரத் பயொடெக் நிறுவனம், இரண்டாவது சோதனை முடிந்த பிறகு எவ்வித தொற்றும் ஏற்படாமல் கொரோனா வைரஸை 81 சதவிகிதம் வரை எதிர்க்கிறது என குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட 25,800 பேரிடம் எடுக்கப்பட்ட சோதனையின் புள்ளிவிவரங்கள் மூலம் இவை கிடைத்துள்ளன. இதுபோலவே, கோவிஷில்டு இரண்டாவது டோஸில் 70 சதவிகிதம் வரை பலனளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.







