நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் உணவகங்களில் ஆய்வு குறித்து ஊடகங்களில் நேர்காணல் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் என்பவர் தான் ஆய்வு செய்வதை ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் தெரிவித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகத்திற்குள் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் உணவகங்களுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி நடத்தவும் தடை விதித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஆய்வு நடத்த பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உள்ளடக்கியது என்றும், அதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மீற முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை சென்னை மாவட்டத்திற்கு மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் அந்த வாதத்தை மறுத்த நீதிமன்றம் உணவு பாதுகாப்பு சட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவானது என்றும் சென்னைக்கு மட்டும் தடை விதிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டது. மேலும், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் ஆய்வு குறித்து நேர்காணல் நடத்தக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-இரா.நம்பிராஜன்








