“அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி.

உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.