தமிழை வழக்காடு மொழியாக்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறினார். அதற்கான நேரம் வந்து விட்டதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரமணாவும் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை 2006ஆம் ஆண்டு திசம்பர் 6ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அதன் பின் 15 ஆண்டுகள் நிறைவடைந்தும் தமிழ் வழக்காடும் மொழியாக ஆக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு சட்டரீதியாகவோ, கட்டமைப்பு ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு எனவும் குறிப்பிட்டார்.
பிரதமர் கூறியுள்ளதை பயன்படுத்திக் கொண்டு தமிழ் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக அறிவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் புதிய தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.







