ஆசை நாயகன் தொடங்கி காதல் மன்னன், அல்டிமேஸ்ட் ஸ்டார், ஏகே என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமாரின் 51வது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பின்வருமாரு பார்ப்போம்.
➤ ரசிகர்களாக இருங்கள். ஆனால் ரசிகராக மட்டுமே வாழ்க்கையை முடித்துவிடாதீர்கள் என தனது ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை வழங்கியுள்ளார். எனது படத்தை பாருங்கள், அதனை ரசியுங்கள், நேரம் என்பது தங்கத்தை போன்றது, அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் தனது ரசிகர்களின் நலனுக்காக பலமுறை அஜித் தொடர்ந்து கூறி வருகிறார். இது தங்கள் மீது அஜித் வைத்திருக்கும் அக்கறையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
➤ தொடர்ந்து சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தபோதும், கார் ரேசில் ஈடுபட்டு விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோதும் நடிகர் அஜித் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பெரிதாக எந்த விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் எதையும் எளிதாக கடந்து செல்லும் நபராக மாறியிருந்தார். இதற்கு என்ன காரணம் என்று பத்திரிகையாளரின் கேள்விக்கு, தோல்விகள் அனைத்துக்கும் தாம் மட்டுமே காரணம் என்று உருக்கமாக பதிலளித்துள்ளார்.
➤ நடிப்பில் மிகவும் கடினமானது நகைச்சுவைதான், அதனால் நகைச்சுவை நடிகர்கள் அனைவருமே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறும் அஜித் தனக்கு பிடித்த காமெடி நடிகர்களாக விவேக், வடிவேலு, சந்தானம் உள்ளிட்டவர்களை குறிப்பிடுகிறார். தனக்கு கிடைத்த சில நேரங்களில் தானும் நகைச்சுவை செய்ய முயன்றுள்ளேன் எனும் நடிகர் அஜித் தனது சில திரைப்படங்களில் நகைச்சுவையையும் சிறப்பாக கையாண்டுள்ளார்.
➤ தனக்கு தோன்றும் போதெல்லாம் பிடித்தமான பைக்கை எடுத்துக்கொண்டு ஒரு பையுடன் சட்டென்று கிளம்பும் அஜித் பல நாட்கள் கழித்து வீடு திரும்பும் பழக்கத்தை கொண்டுள்ளார். இப்படி இவர் செய்யும் பயணங்கள் ரசிகர்களையும் பயணிக்க தூண்டுகிறது. 2021ம் ஆண்டில் வலிமை திரைப்பட படப்பிட்ப்பின்போது 5 ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. பிடித்த நாடுகளுக்கெல்லாம் பைக்குடன் சுற்றும் அஜித் பல்வேறு நாடுகளிலும் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதும் அவை இணையத்தில் வைரலாவது வழக்கமாக இருந்துவருகிறது.
➤ தனக்கு தனிமை மிகவும் பிடிக்கும் என்றும் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பெரிதாக பதிலளிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை என்றும் அஜித் கூறியுள்ளார். விமர்சனங்களுக்கு பதிலளிக்க தொடங்கிவிட்டால் பொய்யாக சொல்லப்பட்டவைகள் உண்மைகளாக உருவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் விமர்சனங்களை அமைதியாக கையாள்வதே சிறந்தது என்ற அஜித்தின் வார்த்தைகள் அவரது ரசிகர்களுக்கு அறிவுரையாகவும் உள்ளது.
➤ தனது தொடர்ச்சியான தோல்விகளின்போது, என்மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டதாகவும் அந்த நேரத்தில் தாம் பேட்டி கொடுத்திருந்தால் தன்னால் எதையும் சொல்லியிருக்க முடியாது என அஜித் ஒருமுறை கூறியுள்ளார். தன்னிடம் இருந்ததெல்லாம் தோல்விகள் மட்டுமே. அதனால்தான் பேட்டி எதையும் கொடுத்து ரசிகர்களை காயப்படுத்த விரும்பவில்லை என்றும் நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
➤ முதலில் அஜித்துக்காக சொல்லப்பட்ட கதைகளில் அவர் நடிக்காததால் அந்த படங்களில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்தார். இந்த படங்கள்தான் சூர்யாவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுத்தது. நந்தா, கஜினி மற்றும் காக்க காக்க உள்ளிட்ட திரைப்படங்கள் அஜித் நிராகரித்து சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றன. நடிகர் விக்ரமின் முக்கிய படமாக பார்க்கப்படும் சாமி திரைப்படத்தின் கதையையும் தன்னிடம் சொன்னபோது நடிகர் அஜித் நிராகரித்துள்ளார். நான் கடவுள் திரைப்படத்தையும் அஜித் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
➤ திரையுலகில் அஜித் நடித்த முதல் படத்தின் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின்றன. இந்த படத்தின் இயக்குனர் செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் அஜித் பள்ளி மாணவனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் வரும் என் கண்மணி என்ற பாடலில் சைக்கிளில் வரும் பள்ளி மாணவனாக அஜித் குமார் நடித்து உள்ளார்.
➤ விஜய்யின் திரைப்படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படம் காதலுக்கு மரியாதை தான், அவரின் பெரும்பாலான படங்கள் எனக்கு பிடித்த படங்கள்தான் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். எப்போதும் மற்ற நடிகர்களின் படங்களை மிகவும் விரும்பியே பார்த்துவருகிறேன், எப்போதும் ஒரு சுமூகமான உறவில் இருப்பதே நன்றாக இருக்கும் என்பதும் அஜித்தின் வார்த்தைகளாக இருக்கின்றன.
➤ கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து 2008ம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்தின் மூலம் இந்திய சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவையே தனது பக்கம் திரும்பி பார்க்கவைத்திருந்தார் . ஆனால் நடிகர் ரஜித் இதே போன்ற சாதனையை 2001ம் ஆண்டே சிட்டிசன் படத்தில் 9 வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். வெவ்வேறு வேடங்களில் நடித்து கொலை செய்யும் கதாப்பாத்திரத்தில் வரும் அஜித் மக்களுக்காக பாடுபடும் நபராக அந்த படத்தில் நடித்திருப்பார்.
➤ கடவுள் பக்தி கொண்டிருக்கும் நடிகர் அஜித்துக்கு பிடித்த கடவுள் விநாயகர்தான். அஜித் தனது பெரும்பாலான படங்களில் விநாயகம் என்ற பெயரை கொண்டு நடித்துள்ளார் . வீரம் படத்தில் விநாயகம் என்ற கதாப்பாத்திரத்திலும், மங்காத்தாவில் விநாயக், வான்மதி திரைப்படத்தில் பிள்ளையார்பட்டி பாடல், அமர்க்களம் படத்தில் மகா கணபதி பாடல் உள்ளிட்டவை அஜித்துக்கும் விநாயகர் கடவுளுக்கும் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
➤ சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை 2000, 2003, 2007 ஆகிய வருடங்களில் 3 முறை விருதுகளை நடிகர் அஜித் வென்றுள்ளார். 4 விஜய் விருதுகளையும் பெற்றுள்ள நடிகர் அஜித், சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதினையும் 2 முறையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான 3 மூன்று விருதுகளையும் நடிகர் அஜித் வென்றுள்ளார்.
➤ தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து அனைவராலும் தல என்று அழைக்கபட்ட நடிகர் அஜித், கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட அறிககையில், இனிமேல் என்னை யாரும் தல உட்பட எந்த புனைப்பெயரையும் வைத்து அழைக்க வேண்டாம் என தெரிவித்தார். அஜித், அஜித்குமார் மற்றும் ஏ.கே என்றே அழைக்கலாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். அஜித்தின் இந்த அறிவிப்பு அனைவருக்கும் பேரதிர்ச்சியாகவே பார்க்கப்பட்டது. ஆனாலும் இந்த அறிவிப்பின் மூலமும் நடிகர் அஜித் தனது மதிப்பை மேலும் உயர்த்திக்கொண்டார்.
➤ வருடந்தோரும் தொடர்ந்து தவறாமல் ஜனநாயக் கடமையை நிறைவு செய்யும் அஜித் 2021ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலின்போது அணிந்திருந்த முகக்கவசத்தின் வண்ணம் பேசுபொருளாக மாறியது. மேலும் தன்னை செல்பி எடுக்க வந்த நபரிடம் இருந்த செல்போனை பிடுங்கி பின்பு திருப்பி கொடுத்ததும் விவாதப்பொருளானது. தேர்தல் நேரத்தில் தேவையற்ற புகைப்படங்களை தவிர்க்க வேண்டும் என்று அஜித் விரும்புவதாகவே அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
➤ நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. குறிப்பாக வலிமை அப்டேட்எனும் வார்த்தை அரசியல் தலைவர்களிடம் தொடங்கி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி வரைக்கும் போய் சேர்ந்தது. எங்கு பார்த்தாலும் வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என்று கேட்கும் அளவுக்கு வலிமை திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிரொளித்தது.
➤ எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மார்ச் மாதம் வெளியான வலிமை திரைப்படம் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலும் பெரிதும் வெற்றி பெற்றது.
➤ வலிமை திரைப்படம் உருவான போது காட்சிகளின் இடையே அஜித் குமார் பைக் ஸ்டண்ட் ஒன்று செய்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். ஆனால் விழுந்த ஒருசில நொடிகளுக்குள்ளாகவே திரும்ப எழுந்து பைக்கை ஓட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலானது. எத்தனை முறை விழுந்தாலும் அஜித் மீண்டு எழுந்து வருகிறார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர்.
➤ இதுவரை தான் நடித்த படங்களிலேயே மிகவும் பிடித்த திரைப்படம் பில்லா என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும், ’என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கனதுடா’ எனும் வசனம் அஜித்தின் நிஜ வாழ்க்கைக்கு பொருந்தும் வசனமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல விபத்துக்களை சந்திக்கும் அஜித் மீண்டெழுந்து வருவதையே இந்த வசனம் குறிப்பதாகவும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
➤ அரசியலுக்குள் நுழைவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அஜித், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் அரசியலுக்குள் நுழையக்கூடாது என்றும் அனைவரும் அவர்களது கடமையை சரியாக செஞ்தாலே நாடு நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை, நல்லது செய்ய வேண்டும் என முடிவு செய்தால் அதை எப்படியும் செய்யலாம் என அவர் கூறியுள்ளார். தனது அதிகபட்ச அரசியல் தேர்தலில் வாக்கு செலுத்துவது மட்டும்தான்” என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
➤ தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்துவரும் நடிகர் அஜித், இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் தனக்கென கணக்கு தொடங்கவில்லை. பல லட்சம் ரசிகர்கள் பின் தொடரும் பெரும் நடிகராக இருந்துகொண்டும் எந்த வலைதளத்திலும் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் இதுவும் அவரது தனித்தன்மையாகவே பார்க்கப்படுகிறது. இவரது அறிக்கைகள் அனைத்தும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் மூலமாகவே தெரிவிக்கப்படுகிறது.
➤ தனது முதுகுத்தண்டுவடத்தில் செய்யப்பட்டுள்ள பல அறுவை சிகிச்சைகளால் நடிகர் அஜித்தின் உடல் எடை அதிகரித்தது. இதனால் பலரது கேளி கிண்டலுக்கு ஆளாகியுள்ளேன் என்று மனம் திறக்கும் அஜித் உண்மையில் தனது படங்களில் பெரும்பாலான ஸ்டண்ட் காட்சிகளை தானே டூப் போடாமல் நடித்து அதனால் பல விபத்துக்களையும் எதிர்கொண்டுள்ளார்.
➤ சினிமா துறையில் நுழைந்து 30 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ரசிகர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் என்ற மூன்று வகுப்பினரும் ஒரு நாணையத்தின் மூன்று பக்கங்கள் என்றும், ரசிகர்ளிடம் இருந்து காதலையும், எதிர்ப்பாளர்களிடம் இருந்து எதிர்ப்பையும், நடுநிலையாளிடமிருந்து சிறந்த கருத்துக்களையும் பெற்றுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரது புகழ்பெற்ற கூற்றான ’வாழு வாழ விடு’ என்பதையும் அஜித் தெரிவித்திருந்தார்.
➤ தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்துகொண்டு 2011ம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை கலைத்த அஜித்தின் அதிரடி நடவடிக்கையானது கடந்த 29 தேதியோடு 11 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. அஜித்தின் ரசிகர் மன்ற கலைப்பு நடவடிக்கை இன்றளவும் அவர் ஒரு நல்ல மனிதர் என்ற பெயரை மக்களிடையே நிலைக்கச் செய்துள்ளது.
தொகுப்பு: யுவராம் பரமசிவம்