தொழிலாளர்களின் உரிமையை போராடி மீட்டெடுத்தவர் அம்பேத்கர் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர்களுக்கு மே 1 தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து செய்தி விடுத்துள்ளார்.
அதில், அமெரிக்க தேசத்தின் சிகாகோ வீதிகளில் நடந்த தொழிலாளர்களின் போராட்டம் தான் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல உரிமைகளை மீட்டளித்தது. எனினும், இந்திய தொழிலாளர் வர்க்கம் இன்று நுகரும் உரிமைகள் யாவும் அம்பேத்கரின் கடின உழைப்பால் விளைந்தவையே ஆகும். அவரது பங்களிப்பை இந்நாளில் நினைவுகூர்ந்து அவருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டியது நமது இன்றியமையாத கடமையாகும். அவரைச் சாதிய அடையாளத்துக்குள் சுருக்கிடும் அறியாமையிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவதும் உடனடியான தேவையாகும்.
அம்பேத்கர் வெள்ளையராட்சிக் காலத்தில் வைசிராய் கவுன்சிலில் அமைச்சராகப் பணியாற்றிய போது தொழிலாளர் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றிருந்தார். அக்காலத்தில் தான் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் இந்த அரும்பெரும் சாதனைகளைப் படைத்தார். அப்போது சுதந்திர தொழிலாளர் கட்சியையும் உருவாக்கித் தேர்தலிலும் பங்கேற்று சட்டப்பேரவையில் அங்கம் வகித்து தொழிலாளர்களுக்காகப் போராடி- வாதாடி உரிமைகளை வென்றெடுக்க வழிவகுத்தார்.
எனவே, இந்நாளில் புரட்சியாளர் அம்பேத்கரை நன்றியுணர்வோடு நினைவுகூர்வோம். இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாவலர் அம்பேத்கரின் வழியில் தொழிலாளர் நலன் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.








