நரிக்குறவ சமூகத்தை சேர்ந்த சுய உதவிக்குழுக்களுக்கு தொழிற்கூடம் அமைக்க 2.56 கோடி ரூபாய் பணத்தை வழங்கி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நெமிலி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தொழில் முனைவோர்களுக்கு தொழிற்கூடம் அமைக்க 2.50 கோடி ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நரிக்குறவ மகளிருக்கு மணிமாலை கோர்த்தல், பட்டு நூல் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி அளித்து, அவர்களின் வாழ்வாதாரம் உயர இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 560 நரிக்குறவர் குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் மாவட்டத்தில் நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழிற்கூடம் 2.56 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ளது என்றார். இக்கூடத்தில் பயிற்சி அளிக்க இயந்திரங்கள் பொருத்தப்படும்.
இந்த நல்ல வாய்ப்பை நரிக்குறவ சமூகத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் நன்கு பயன்படுத்தி மென்மேலும் முன்னேற்றம் அடைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தை
முன் மாதிரியான மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழு தலைவர் கருணாநிதி, ரீடிஸ் தொண்டு நிறுவன நிர்வாகி தரணி முரளிதரன் மற்றும் நபார்டு வங்கி மேலாளர், மகளிர் திட்ட அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
– இரா.நம்பிராஜன்








