பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவுக்கு எதிராக ஊழல் புகார் எழுந்ததை அடுத்து, மாநில அமைச்சர் பொறுப்பிலிருந்து அவரை பஞ்சாப் முதல்வர் மான் சிங் அதிரடியாக நீக்கினார்.
பஞ்சாப் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையில் ஒரு டெண்டரை முடித்துக் கொடுக்க வேண்டுமானால் ஒரு சதவீத கமிஷன் தர வேண்டும் என்று விஜய் சிங்லா கேட்டதாகப் புகார் எழுந்தது. பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. முதல்வராக மான் சிங் பதவி வகித்து வருகிறார். டெல்லிக்கு பிறகு பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. மார்ச் 16ம் தேதி முதல்வராக மான் சிங் பதவியேற்றார். அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
சொன்ன வாக்கை காப்பாற்றும் வகையில் தற்போது நடவடிக்கையும் எடுத்து மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் மான் சிங். விஜய் சிங்லாவுக்கு எதிரான ஊழல் புகாருக்கு ஆதாரம் இருந்ததால் அவரை பதவியைவிட்டு நீக்கியதாக அவர் தெரிவித்தார்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால், மான் சிங்கை பாராட்டினார். மான் சிங் கூறுகையில், எனது தலைமையிலான அரசில் ஊழல் இருக்கக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தேன் என்றார்.
எனது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. எனது அரசில் ஊழலுக்கு இடம் கிடையாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
இதனிடையே, விஜய் சிங்கலாவை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.








