சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்கிட சிறப்பு அவசர ஊர்தி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சங்களை தொட்டு வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டால் உயிர்பிழைப்போமா? என்ற எண்ணம் மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் உயர்ந்துவரும் நிலையில், நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போதுமான அளவு ஆம்புலன்ஸ் இல்லை என்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதை அறிந்த தமிழக அரசு அம்புலன்ஸ் தட்டுப்பாடை குறைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய திட்டம் ஒன்றை வடிவமைத்தது.
அதில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, கார்களை மினி அம்புலன்ஸ்களாக மாற்றும் திட்டம். தீவிர அறிகுறிகள் இல்லாதவர்கள், ஆக்சிஜன் உதவி தேவைப்படாதவர்கள் உள்ளிட்டோர்களை கொரோனா சிகிச்சை மையம் அல்லது, மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கென மட்டுமே இந்த சிறப்பு ஊர்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தீவிர பாதிப்பு இருப்பவர்கள், ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முழுமையாக 108 ஆம்புலன்ஸ் சேவை சென்றடைய வழிவகை ஏற்படும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு.

கடந்த 12ம் தேதி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த சிறப்பு அவசர ஊர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி உடன் இருக்க நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து சிறப்பு அவசர ஊர்திகளை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அன்றே 50 சிறப்பு அவசர ஊர்திகள் செயல்பாட்டுக்கு வந்தன. அதை தொடர்ந்து, சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் சேர்த்து 250 சிறப்பு அவசர ஊர்திகள் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இந்த மினி ஆம்புலன்ஸ்கள் இயங்க தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இந்த திட்டம் மூலம், உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.







