ஆக்சிஜன் பற்றாக்குறை: சிங்கப்பூரிலிருந்து வந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள்!

சிங்கப்பூரிலிருந்து நான்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாட்டின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க சிங்கப்பூரிலிருந்து நான்கு…

சிங்கப்பூரிலிருந்து நான்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டது.


கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாட்டின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க சிங்கப்பூரிலிருந்து நான்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் இந்தியா எடுத்துவரப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


“கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்கிறோம். இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் இந்திய விமானப் படையின் போக்குவரத்து விமானம் மூலம் நான்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் கண்ட்டெய்னர்கள் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது” என சிங்கப்பூர் தூதரகம் டுவீட் செய்துள்ளது.


முன்னதாக ஜெர்மனியிலிருந்து 23 மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கடந்த 23ம் தேதி இராணுவ அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,69,60,172 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,767 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவலால் இந்தியா நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சூழலில், உலக அளவில் பல்வேறு தலைவர்கள் இந்தியாவிற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். முன்னதாக நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இந்திய மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.