கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுத் துறை, காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்று மட்டும் ஒரே நாளில் 2069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,094 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா, விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்திவது குறித்து நாளை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
நேற்று வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,033 ஆக இருந்தது. இன்று புதிதாக 2,069 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,008 பேர் உடல்நலம் தேறி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்றைய நிலவரப்படி மொத்தம் 11,094 பேருக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தான் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இன்று மட்டும் சென்னை மாவட்டத்தில் 909 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 352 பேர் பாதிக்கப்பட்டனர். கோவையில் 96 பேரும், காஞ்சிபுரத்தில் 71 பேருக்கு கொரோனா வைரஸ் இன்று உறுதியானது. திருவள்ளூரில் 100 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குள்ப்பட்ட சிறுவர்-சிறுமிகள் வீட்டை விட்டு தேவை ஏதுமின்றி வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.








