தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்; சென்னை விரைந்த ஓ.பி.எஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெரியகுளம் வந்த நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார். அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெரியகுளம் வந்த நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார்.

அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரட்டைத் தலைமைகளாக கட்சியை வழிநடத்த தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவருக்கும் வழங்கும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், காலச்சூழலுக்கு ஏற்ப அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை தேவை என கட்சி நிர்வாகிகள் பலர் வெளிப்படையாகவே பேசினார். இந்நிலையில் பரபரப்பு, சலசலப்புடன் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. இதில் ஒற்றைத் தலைமை குறித்தும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல்கள் எழுந்தன. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.

இதனால் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக இன்று தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். டெல்லியிலிருந்து நேற்று தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு திரும்பிய நிலையில் மதுரை மார்க்கமாக விமான நிலையம் வந்து உசிலம்பட்டி ஆண்டிபட்டி தேனி என தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்தார். அப்போது அதிமுகவினர் அவருக்கு மேளதாளங்கள்
முழங்க பட்டாசுகள் வெடித்து ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு கொடுத்தனர்.

இந்தநிலையில் அடுத்தடுத்த நகர்வுகள் அதிமுகவில் என்ன நடக்கவிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இன்று அவர் பெரியகுளத்தில் இருந்து சென்னைக்கு உடனடியாக கிளம்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.