சர்ச்சை ஆடியோ குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளதோடு, தான் பேசியது போன்று வெளியான ஆடியோ போலியானது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாள்களாக சமூகவலைதளங்களில் ஆடியோ ஒன்று பரவிவருகிறது. 12 மணி நேர வேலை சட்டத் திருத்தம், Dmk Files, திருமண மண்டபங்களில் மதுபான விருந்துக்கு அனுமதி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய ஆடியோ தொடர்பாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வீடியோ மற்றும் அறிக்கை வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், முக்கிய நிதி சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை, வெறும் இரண்டே ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம். அதனால்தான் இதனை திராவிட மடல் ஆட்சி என்று கூறுகிறோம். திராவிட மாடலை ஜீரணிக்க முடியாத சிலர்தான் இதுபோன்ற மலிவான தந்திரங்கள் கொண்ட போலியான ஆடியோ ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த தலைமுறையின் நம்பிக்கை உதயநிதி ஸ்டாலின். எனக்கு சபரீசன் மிகவும் நம்பகமான ஆலோசகர். நான் பேசியதாக வெளியான ஆடியோ ஒளிப்பதிவு முழுக்க முழுக்க சித்தரிக்கபப்ட்டவை. இதுபோன்ற ஒலிப்பதிவுகள் உலக அளவில் கிடைக்கின்றது. பிளாக்மெயில் லட்சியம் கொண்ட கும்பலின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. நாங்கள் அனைவரும் ஒரு இயக்கமாக, ஒரு குடும்பமாக இருக்கிறோம் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/ptrmadurai/status/1651157513994379265?s=46
- பி.ஜேம்ஸ் லிசா








