கர்நாடக தேர்தல் களத்தில் நியூஸ் 7 தமிழ்; தமிழர்களின் கோரிக்கைகளும், வேட்பாளர்களின் வாக்குறுதிகளும்…

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில்,…

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, கேஜிஎப் என அழைக்கப்படும் கோலார் தங்க வயல் தொகுதியில் தமிழர்கள் 5 தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் உள்ளனர். வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் நியூஸ் 7 தமிழ் வாயிலாக கோலாரில் வசிக்கும் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கேஜிஎப் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் ஜோதி சு போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் களமிறக்கப்பட்டு இருக்கிறார்.

தான் வெற்றி பெற்றால் தங்க சுரங்கம் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என வேட்பாளர் ஜோதிபாசு, நியூஸ் 7 தமிழின் சிறப்பு செய்தியாளர் வசந்தியிடம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உரிமை மீட்டு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார். தமிழர்களுக்குப் பட்டா விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் சார்பாக இரண்டாவது முறையாக கோலார் தங்க வயல் தொகுதியில் போட்டியிடுகிறார் ரூபகலா. இவர் தான் மீண்டும் வெற்றி பெற்றால் கோலார் தங்க வயல் மக்களின் வீடுகளில் பட்டா பெற்றுத் தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார் அதேபோல தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குடியரசு கட்சியின் சார்பில் அதன் தேசிய தலைவர் எஸ் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். பதவிக்கு வந்தால் மக்களுக்கு சாலை மற்றும் மின் விளக்குகள் வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.