அனைத்து சாதியினரும் அர்ச்சகராகக் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கப்பட்டு வரும் தொடர் முயற்சிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையின் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் பணிநியமனத்திற்கு வகுத்துள்ள விதிகள் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள், அங்குப் பின்பற்றப்படும் ஆகமங்கள், ஆகம விதிகளைப் பின்பற்றாத கோயில்கள் எவை எனக் கண்டறிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோரைக் கொண்ட 5 பேர் குழுவை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 1970ம் ஆண்டு அனைவரும் கோயில் கருவறைக்குள் செல்லும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். அப்போது முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் விரைவில் இயற்றப்படும். எனவே போராட்டம் வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பெரியார் போராட்டத்தைக் கைவிட்டார். அடுத்த சில நாட்களில் அனைவரும் அர்ச்சகராகும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் திருத்தம் செய்து, சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையில் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து சேஷம்மாள் சார்பில் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 1972ம் ஆண்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால், “ஆகமங்களுக்கு உட்பட்டே நியமனம் செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டது. இதையடுத்து 1982ம் MGR முதலமைச்சராக இருந்த போது, கோயில் பழக்க வழக்கங்களை முறைப்படுத்த நீதிபதி மகாராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, ஆகம விதிமுறைப்படி “கோயில்களில் அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்” என்று பரிந்துரை செய்தது.
ஆனாலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு உடனடியாக ஏற்படவில்லை. கடந்த 2002-ஆம் கேரள அரசு – ஆதித்யன் இடையிலான வழக்கில் “அனைவரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்” என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசாணை பிறப்பித்து, இதற்கான சட்டத்தையும் இயற்றினார்.
அப்போது, “பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, சென்னை, ஸ்ரீரங்கத்தில் வைணவ அர்ச்சகர்களுக்கும் மதுரை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூரில் சைவ அர்ச்சகர்களுக்கும் என 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஒரு பள்ளியில் 40 பேர் என பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 240 பேருக்கு 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பயிற்சி தொடங்கப்பட்டது. பயிற்சியின் போது 33 பேர் பல்வேறு காரணங்களால் இடையில் விலகிக் கொண்டனர். மற்ற 207 பேர் 13 மாத கால பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
ஆனாலும், அவர்களுக்குப் பணி நியமனம் செய்யப்படவில்லை. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இது குறித்த வழக்கில், “ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்கலாம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், “தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எந்தவித தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை. ஆகம விதிமுறையில் குறிப்பிட்ட சாதியினர்/பிரிவினர் மட்டும் தான் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவுமில்லை. ஆகையால்,அனைத்து சாதியினரும் அர்ச்சகராகத் தடையில்லை” என்று அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் தரப்பில் விளக்கமளித்தனர். தெய்வத் தமிழ் அறக்கட்டளை தலைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2018-ஆம் ஆண்டு மதுரை அழகர் கோயிலுக்கு உட்பட்ட அய்யப்பன் கோயிலில் மாரிமுத்து என்பவரும் 2020-ஆம் ஆண்டு நாகமலைப் புதுக்கோட்டை விநாயகர் கோயிலில் தியாகராஜன் என்பவரும் அர்ச்சகர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோயில் அர்ச்சகர், ஊழியர்கள் பணி நியமனத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இதன்படி, ஆகம பயிற்சி பெற்ற, 18 – 35 வயதுடையோர் அர்ச்சகர்களாகப் பணி நியமனம் செய்யப்படலாம் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் தேதி 24 பேர் அர்ச்சகர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அண்மைச் செய்தி: ‘படுகர் இன மக்களைத் தனி பழங்குடியினர் சமூகமாகக் கணக்கிட வேண்டும்: ஆ.இராசா’
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் தமிழ் மந்திரங்கள், பூசை, வழிபாட்டு முறைகளில் பயிற்சி பெற்ற, 18 – 35 வயதிற்கு உட்பட்டவர்களே அர்ச்சகர்களாகப் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் சிலவற்றிற்கு எதிராக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ் நாத் பண்டாரி, என்.மாலா அமர்வு தீர்ப்பளித்துள்ளனர்.
“கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என்று திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு பாஜக என்றும் ஆதரவு அளிக்கும். சில கோயில்களில் பூஜை செய்யும் ஆகம சாஸ்திர முறைகளைச் சரியாக கடைப்பிடித்து அதற்கேற்றாற்போல் செய்ய வேண்டும்.” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்று 150க்கும் மேற்பட்டவர்கள் பணி வேண்டிக் காத்திருக்கிறனர். அவர்களில் பலரும் 35 வயதைக் கடந்தவர்கள். ஆகையால் தங்களுக்கு வயது வரம்பில் விலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.