முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஆலோசிக்கலாம், ஆனால்…” – புதிய தீர்மானங்களுக்கு நீதிமன்றம் செக்

அதிமுக பொதுக்குழுவில் புதிய ஆலோசனைகளை மேற்கொள்ளலாம் ஆனால், அவற்றை கொள்கை முடிவாகவோ, தீர்மானங்களாகவோ நிறைவேற்றக்கூடாது என நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க கோரி அக்கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, தணிகாச்சலம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தன. இதில் இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாகத் தலையிடுவதில்லை என்றும், நிர்வாக வசதிக்காகச் சட்ட திட்டங்களைக் கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என தீர்ப்பளித்து பொதுக்குழுவை நடத்த இசைவு தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நள்ளிரவு 2.45க்கு நீதிபதி இல்லத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பில் அரவிந்த் பாண்டியன் மற்றும் திருமாறன் ஆஜராகினர்.

வாதத்தின்போது, “இன்று நடக்க உள்ள பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதுதவிர கூடுதல் தீர்மானங்கள் வரக் கூடும் என்ற அச்சம் உள்ளது. தெரிவிக்கப்பட்டதை விட கூடுதல் அஜெண்டவை நிறைவேற்றக்கூடாது என்பதுதான் தனி நீதிபதி முன்பு நாங்கள் வாதாடினோம். தற்போது பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் உள்ளது” என ஓபிஎஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

மேலும், “2021ல் கொண்டு வரப்பட்ட திருத்தப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும் முடிவுகளை எடுக்க முடியும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் 23 தீர்மானங்களுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளனர். எனவே இதை தவிர்த்து வேறு தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றக்கூடாது. இதைதான் தனி நீதிபதியிடம் வலியுறுத்தினோம். ஆனால் கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதி கூறிவிட்டார்.

கட்சி விதி மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம். பொதுக்குழு குறித்து 15 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் கொடுத்து பின்னர்தான் கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆனால் விதி மீறப்பட்டுள்ளது. மட்டுமல்லாது ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன” என்றும் வாதிடப்பட்டது.

ஆனால், “பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அல்ல. பொதுக்குழுதான் கட்சியில் உச்சபட்ச அமைப்பு. இக்குழு கட்சி தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கலாம். குழுவின் முடிவே இறுதியானது. என் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவில் எதையும் விவாதிக்க கூடாது என்பதை ஏற்க முடியாது. தனி நபர்களை விட பொதுக்குழுவே மேலானது” என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், “ஓபிஎஸ்க்கு 23 தீர்மானங்கள் வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. கூட்டம் தொடர்பான நோட்டீஸ் மட்டுமே அனைவருக்கும் வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அஜெண்டா கொடுப்பதே இல்லை” என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இடையில் குறுக்கிட்ட நீதிபதிகள் என்ன நடக்கப்போகிறது என்பதை வெளிப்படையாக உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது அவசியம் என்றும், எழுதப்படாத தீர்மானங்கள் ஏதும் வைத்துள்ளீர்களா? எனவும் இபிஎஸ் தரப்புக்கு கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த இபிஎஸ் தரப்பு, “எழுதப்படாத செயல் திட்டம் ஏதும் இல்லை. கூட்டத்தில் உறுப்பினர்கள் ஏதேனும் பிரச்னையை எழுப்பக் கூடும்.” என்று கூறப்பட்டது.

இந்நிலையில், “எழுதப்படாத செயல் திட்டம் இல்லாதபோது கூட்டத்தில் விவாதிக்கலாம். தீர்மானம் நிறைவேற்ற கூடாது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த இபிஎஸ் தரப்பு, “இது கட்சியை ஒடுக்குவதைப் போல் உள்ளது. அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்படும். அவர்கள் தங்களது கருத்தை கூறலாம். அவர்கள் விரும்பவில்லை என்றால் எதுவும் நடக்காது. நாளை என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பது உறுப்பினர்கள்தான் முடிவெடுப்பர். யூகத்தின் அடிப்படையில் முடிவுக்கு வரக் கூடாது.” என்று கூறினர்.

இவ்வாறு இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர்த்து புதிதாக ஆலோசனை மேற்கொள்ளலாம் ஆனால் எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர். இதில் புதிய தீர்மானங்களை முடிவெடுக்கலாம் ஆனால் அமல்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட வேண்டும் என இபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் பொதுக்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ் தரப்பினரும் ஆயத்தமாகி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா பரவல் எதிரொலி; முதல்வர் அவசர ஆலோசனை

Saravana Kumar

முழு ஊரடங்குக்கு அவசியமில்லை: தமிழக அரசு!

Ezhilarasan

சென்னையில் மழை, வெள்ளப் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் வெளியீடு

Halley Karthik