நீதிமன்ற தீர்ப்பால் இபிஎஸ்-க்கு பின்னடைவு இல்லையென முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் புதிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, கழகத்திற்கு விரோதமான தீர்ப்பு என புதுச்சேரி அன்பழகன் கூறியுள்ளார். இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், “ஒருங்கிணைப்பாளர் புதல்வர் முதலமைச்சரை சந்தித்த பின் அவரை பற்றி பெருமையாக பேசினார் அதற்கு கிடைத்த தீர்ப்பு இது. பொதுகக்குழு இப்படித்தான் நடத்த வேண்டும் என நீதிமன்றம் சென்றவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்வது குறித்து கழகத்தின் உயர்மட்ட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்” என புதுச்சேரி அன்பழகன் கூறினார்.
இவரைத் தொடர்ந்து பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சூழ்நிலைகள் பொறுத்து விவாதிக்கப்படும்.” என கூறினார். மேலும், “நீதிமன்றம் வழிகாட்டுதல் படி பொதுக்குழு நடக்கும்.
அனைவரின் கருத்துக்களை கேட்கதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி 4.30 மணி நேரம் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சூழ்நிலைகள் பொறுத்து இது குறித்து விவாதிக்கப்படும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்ததாவது, “எடப்பாடியார் அதிகாரமிக்க ஒற்றை தலைவராக விரைவில் வருவார். நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம். எதிர்காலத்தில் மிக விரைவில் தொண்டர் விருப்பப்படி ஒற்றை தலைமை உருவாகும். ஒன்றரை கோடி தொடர்களின் இயக்கம் வெற்றி பாதையில் செல்ல எடப்பாடியார் அதிகாரமிக்க ஒற்றை தலைவராக விரைவில் வருவார். நல்லபடியாக சுமூகமாக பொதுக்குழு நடைபெறும்” என்று கூறினார்.
முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய தீர்மானங்களை நிறைவேற்ற நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.