இந்திய வரலாற்றில் முதன் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குடியரசு தலைவராகும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதன் மூலம் உண்மையான சமூக நீதி காத்த உத்தமராக பிரதமர் மோடி விளங்குவதாகவும் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளராக முன்மொழியப்பட்ட சரத்பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பாரூக் அப்துல்லா ஆகியோர் போட்டியிட மறுத்து விட்டதாகக் சுட்டிக்காட்டியுள்ளார். குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச தகுதியுள்ள வேட்பாளரை தேர்வு செய்ய இயலாமல், ஏற்கனவே பாஜகவில் இருந்த, உயர்ஜாதி இனத்தவரான யஷ்வந்த் சின்ஹாவைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டு உள்ளதாகவும் அண்ணாமலை தமது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, என்று இதுவரை பேசிய திமுக , திருமாவளவன், மற்றும் காங்கிரஸ் கட்சியினர் யாரை ஆதரிக்கப் போகின்றனர் ? எனக் கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, இந்தியாவில் பத்துக்கோடிப் பேருக்கும் மேல் பழங்குடி இனத்தவர் இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர் கூட இதுவரை குடியரசு தலைவர் ஆனதில்லை என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த பி ஏ சங்மாவை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தியபோது, பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிட வைத்து சங்மாவைத் காங்கிரஸ் கட்சி தோற்கடித்ததாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்த பட்டியலைப் பார்த்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கான வாய்ய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது தெரியும் என்று கூறியுள்ள அண்ணாமலை, தற்போது பாஜகவின் சார்பில், மீண்டும் ஒரு பழங்குடி இன வேட்பாளராக திரௌபதி முர்மு குடியரசு தலைவர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்..
இம்முறை பழங்குடியினப் பெண் வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்து, போட்டியின்றி வெற்றி பெற துணை நிற்க வேண்டாமா? என திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திமுக, திருமாவளவன், காங்கிரஸ் கட்சியினரின் சமூக நீதி என்பது வாய்ச்சொல்லில் தான் இருக்கிறது என சாடியுள்ள அண்ணாமலை, தமிழ்நாட்டில் இருப்பது சமூகநீதியா சந்தர்ப்பவாதமா என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம் எனத்தெரிவித்துள்ளார். உண்மையான சமூக நீதி காத்த உத்தமராக விளங்கும் பிரதர் நரேந்திர மோடி, குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளிவீசுவதாக தமது அறிக்கையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.