அரசியலமைப்பு நாள்: மு.க.ஸ்டாலின், கனிமொழி உறுதி!

இந்திய அரசியலமைப்பு நாளான இன்று (நவம்பர் 26), அரசியலமைப்புச் சட்டத்தின் முற்போக்குக் கொள்கைகள், சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மாநில சுயாட்சி, உண்மையான கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும்!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல நூற்றாண்டுகளாக நிலவிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில், சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளித்து, சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த முற்போக்கான அரசியலமைப்புச் சட்டமாக இது திகழ்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சமூகத்தின் மாறிவரும் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பரிணமிக்கும் உயிருள்ள ஆவணமாக அரசியலமைப்பை வடிவமைத்தார்.

இந்தியாவின் அரசியலமைப்புப் பயணம் 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவை உண்மையான கூட்டாட்சிக் கட்டமைப்பைக் கொண்ட நாடாக மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தை விரிவாக மறுஆய்வு செய்வது அவசியமாகிறது. இந்த நோக்கத்துடன்தான், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை நமது திமுக அரசு அமைத்தது. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் அந்தக் குழுவைக் கலைக்க முடிவு செய்துள்ளனர். இருப்பினும், மாநில சுயாட்சி மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இந்த அரசியலமைப்பு நாளில், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முற்போக்கான கொள்கைகளைப் பாதுகாப்பதோடு, அதன் கூட்டாட்சித் தன்மையையும் மேலும் வலுப்படுத்த உறுதியேற்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி. இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்போம்!

“நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்திற்கு அர்த்தமளித்து, இந்தியாவின் பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் தாங்கி நிற்பது அரசியலமைப்புச் சட்டம்.

இந்த 77-வது அரசியலமைப்பு நாளில், அண்ணல் அம்பேத்கர் நமக்களித்த அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதோடு, சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகிய அதன் விழுமியங்களையும் மாண்பையும் காத்திட உறுதியேற்போம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.