நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இதன்படி, நவம்பர் 30-ம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையும் கூடுகின்றன. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் என்பதால், இவற்றை நிறைவேற்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் போதிய ஆதரவு கிடைக்காததால் 3 மசோதாக்களும் தோல்வியடைந்தன. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் மீண்டும் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், திமுக சில நிபந்தனைகளோடு இதற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவுக்கு சிபிஐஎம் வேண்டுகோள்!
இந்நிலையில், சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“தொகுதி மறு வரையறை குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஒன்றிய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




