தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக பாஜக மீது குற்றச்சாட்டு!
“மழைக்காலக் கூட்டத்தொடரை முறைப்படி முடிக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று வெறும் 4 நாட்கள் அவகாசத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை) நாடாளுமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வழக்கமாகப் புதிய கூட்டத்தொடரைக் கூட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்; எம்.பி.க்கள் கேள்விகள் கேட்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற மோடி அரசு, கேள்வி நேரத்தையும், பூஜ்ஜிய நேரத்தையும், தனிநபர் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு, எம்.பி.க்களின் அரசியலமைப்பு உரிமையையே பறித்துள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் பற்றியோ, மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ விவாதிக்காமல், மக்களவைத் தொகுதிகளை 550-லிருந்து 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்றவே பாஜக துடிக்கிறது.
தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கச் சதி!
மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநில ஆதிக்கத்தை நிலைநாட்டி, “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற சர்வாதிகாரத்தைத் திணிக்கத் துடிக்கிறது பாஜக. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து மூக்குடைபட்ட பாஜக, இப்போது தங்களுக்கு இருக்கும் 322 வாக்குகளுடன், எதிர்க்கட்சிகளை உடைத்தும், சில கட்சிகளின் மறைமுக ஆதரவுடனும் 360 என்ற மாய எண்ணைத் தொடச் சதிவலை பின்னுகிறது.
தமிழ்நாட்டின் உரிமைகள் குறித்து பேசியவர்களுக்கு கடும் விமர்சனம்!
பாஜகவின் இந்தச் சூழ்ச்சி ஒருபுறம் என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாக வீரவசனம் பேசியவர்களின் திடீர் ‘அந்தர் பல்டி’ தான், பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துவிட்டு, இப்போது பதுங்கி ஓடும் காமெடி சீனாக மாறியிருக்கிறது! கைப்புள்ள ‘நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்’னு கோடெல்லாம் கிழிச்சு சவுண்டு விட்டுட்டு, கடைசியில அடிவாங்க பயந்து பம்முற மாதிரி, நேத்து வரைக்கும் ‘டெல்லிக்குப் பயப்பட மாட்டோம்’னு வீரவசனம் பேசிட்டு, இன்னைக்கு ‘மசோதா வாசகத்தைப் பார்த்துட்டு ஆதரிக்கலாமா வேண்டாமானு யோசிக்கிறோம்’னு பதுங்குறீங்களே என்று தமிழ்நாட்டு மக்களே சிரிக்கிறார்கள்.
30 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு பின்வாங்குவது ஏன்?
கடந்த ஏப்ரல் மாதம் எதிர்த்து வாக்களித்துவிட்டு, தெருவுக்குத் தெரு தொகுதி மறுவரையறை மசோதா நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தியதும், “கடந்த ஒரு வருடமாக எதிர்க்கிறோம், நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்” என்று சவால் விட்டதும் என்ன ஆச்சு? இப்போது மக்களவையில் 22 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் என 30 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, “எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கொடுத்தால் ஆதரிப்போம்” என்று பம்முவதும், வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாக வாக்குகள் கிடைக்க உதவப் பார்ப்பதும் ஏன்?
டெல்லியிடம் சரணடைவதே மெயின் பிக்சரா?
“இது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரைப் பார்க்கணும்னு டெல்லி ஆசைப்படக் கூடாது” என்று முழங்கினார்கள். ஆனால், நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தில் ‘மெயின் பிக்சர்’ ரிலீஸ் ஆகும்போது, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு பாஜகவிடம் சரணடைவதும், டெல்லிக்கு அடிபணிவதும்தான் இவர்களின் ‘மெயின் பிக்சராக’ இருக்கப் போகிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்!
ஆதரிப்பவர்கள் 21-ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள்!
நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறிப்பிட்டது போல, “நாடாளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்க பாஜக கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள். அவர்களை 21-ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




