அமெரிக்காவில் பயங்கர புயல்: 1,800 விமானங்கள் தாமதம்; லட்சக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பு!

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் 1,800 விமானங்கள் தாமதமாகின. பல்வேறு மாகாணங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் 8.36 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்நுகர்வோர் மின்சாரமின்றி தவித்தனர்.

மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று!

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் தினமான (Thanksgiving Day) நவம்பர் 26 – வியாழக்கிழமை, கிழக்கு கடலோரப் பகுதிகளில் சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால் பல்வேறு மாகாணங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மணிக்கு 70 மைல் (112 கி.மீ.) வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் பல இடங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. தாழ்வான கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

1,800 விமானங்கள் தாமதம்!

புயலின் தாக்கத்தால் அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனமான FlightAware வெளியிட்ட தகவலின்படி, நவம்பர் 27 – வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவரப்படி அமெரிக்காவுடன் தொடர்புடைய 417 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 1,800 விமானங்கள் தாமதமாகின. குறிப்பாக வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரப் பகுதிகளில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

8.36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி தவிப்பு!

புயல் பல்வேறு மாகாணங்களைக் கடந்து சென்ற நிலையில் மின்தடை பாதிப்பும் அதிகரித்தது. இந்திய நேரப்படி நவம்பர் 27 – வெள்ளிக்கிழமை அதிகாலை 2.36 மணி நிலவரப்படி, அமெரிக்கா முழுவதும் 8,36,000-க்கும் மேற்பட்ட மின்நுகர்வோர் மின்சாரம் இன்றி தவித்ததாக PowerOutage.us தெரிவித்துள்ளது.

மாகாண வாரியாக ஏற்பட்ட மின்தடை விவரங்கள்:

  • வர்ஜீனியா – 1.70 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
  • மேரிலாந்து – 1.70 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
  • பென்சில்வேனியா – சுமார் 1.70 லட்சம் பேர்
  • மிசோரி – 1.17 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
  • நியூ ஜெர்சி – 91,000-க்கும் மேற்பட்டோர்
  • டெலாவேர் – 20,000-க்கும் மேற்பட்டோர்
  • வடக்கு கரோலினா – சுமார் 16,000 பேர்

பலத்த கடற்காற்று மற்றும் மழையால் நிலம் ஈரமாக இருந்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயம் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகளும் மாநில நிர்வாகங்களும் ஏற்கனவே எச்சரித்திருந்தன.

கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) வெளியிட்ட தகவலின்படி, வர்ஜீனியா, மேரிலாந்து, டெலாவேர், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் நியூ இங்கிலாந்தின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 மைல் வேகத்தில் காற்று வீசியது. நியூயார்க் நகர அவசரகால மேலாண்மை அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, நவம்பர் 27 – வெள்ளிக்கிழமை அதிகாலை காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. லாகார்டியா விமான நிலையத்தில் மணிக்கு 56 மைல் (90 கி.மீ.) வேகத்தில் காற்று வீசியது. மேலும், கடலிலிருந்து கரையை நோக்கி வீசிய பலத்த காற்றுடன் அதிக அலைகளும் இணைந்ததால் கிழக்கு கடற்கரையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

100-வது ஆண்டு அணிவகுப்பு ஒத்திவைப்பு!

இதற்கிடையே, புயலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்றும், மிட்-அட்லாண்டிக் பகுதிகளில் இரவு நேரத்தில் மழையும் காற்றின் வேகமும் தணியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நவம்பர் 27 – வெள்ளிக்கிழமையும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 25 முதல் 35 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனக் கணிக்கப்பட்டது. இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற மேசிஸ் நன்றி தெரிவிக்கும் தின அணிவகுப்பின் (Macy’s Thanksgiving Day Parade) 100-வது ஆண்டு நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக இந்த அணிவகுப்பு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.