மேகாலயாவின் அரசியல் சாணக்கியன் – தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சரானது எப்படி?

மேகாலயா முதலமைச்சராக பதவியேற்ற கான்ராட் ஆட்சிக்கும், கூட்டணிக்கும் நாங்கள்தான் தலைமை, இதில் மாற்றமில்லை  என பாஜகவிடம் உறுதியாக கூறி மீண்டும் மேகலாலயா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள கான்ராட் சங்மாவைப் பற்றி பார்க்கலாம். நாகலாந்து, மேகாலயா…

மேகாலயா முதலமைச்சராக பதவியேற்ற கான்ராட் ஆட்சிக்கும், கூட்டணிக்கும் நாங்கள்தான் தலைமை, இதில் மாற்றமில்லை  என பாஜகவிடம் உறுதியாக கூறி மீண்டும் மேகலாலயா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள கான்ராட் சங்மாவைப் பற்றி பார்க்கலாம்.

நாகலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. இதில் மூன்று மாநிலங்களிலும் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்துள்ளன. மேகாலயா மாநில முதலமைச்சரும் – தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு எதிராக கலகக்குரல் எழுப்பி வெளியேறி, தனித்தன்மை மாறாத அரசியல் ஆளுமையாக வலம் வந்தவர் மறைந்த பி.ஏ.சங்மா. மக்களவை எம்பியாக 9 முறை மேகாலயா முதலமைச்சர், மத்திய அமைச்சர், மக்களவை சபாநாயகர், குடியரசு தலைவர் வேட்பாளர் என பன்முகம் கொண்ட சங்மாவின்  இரண்டாவது மகன்தான் கான்ராட் சங்மா. 1978ம் ஆண்டு பிறந்த கான்ராட் சங்மா, புதுடெல்லியில் பள்ளிப்படிப்பையும், லண்டனில் வணிகவியல்-நிதி நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர். இசைப்பிரியர். கான்ராட் சங்மா. 2009 இல் மருத்துவர் மெஹ்தாப் சண்டியை மணந்தார்

தந்தை சங்மாவின் அரசியல் வாழ்க்கையில், அவருக்கு ஒரு உதவியாளராக இருந்து அரசியலை பயின்றவர் கான்ராட் சங்மா, குறிப்பாக சங்மா தேசியவாத காங்கிரசில் சேர்ந்த பிறகும், தேசிய மக்கள் கட்சியை தனியாக தொடங்கிய போதும் முழு மூச்சுடன் அரசியல் களத்தில் பணியாற்றி மேகாலயாவில் இருந்த காங்கிரஸ் வாக்கு வங்கியை சங்மாவின் வாக்கு வங்கியாக மாற்றிய பெருமைக்கு உரியவர் கான்ராட் சங்மா. தேசிய மக்கள் கட்சியியினர் வடகிழக்கின் பல மாநிலங்களிலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் எம்எல்ஏக்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டு மேகாலயா மாநில அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் பதவி, தந்தை சங்மாவின் மறைவுக்கு பின் தேசிய மக்கள் கட்சியின் தலைவர், மக்களவை எம்பி என தன்னை தேர்ந்த அரசியல் தலைவராக தகவமைத்துக் கொண்டார் கான்ராட் சங்மா. 2018ம் ஆண்டு மேகாலயா மாநில சட்ட பேரவை தேர்தலில் 19 எம்.எல்.ஏக்களை வென்றது தேசிய மக்கள் கட்சி. பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்த கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக பதவியேற்றார் கான்ராட் சங்மா. 2023ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம், முன்பு கூட்டணி கட்சியான பாஜக, மத்தியிலும் பல மாநிலங்களிலும் நாங்கள்தான் ஆளும் கட்சி எனக் கூறி, மொத்தமுள்ள 60 இடங்களை சரிபாதியாக பங்கிட்டு கொள்வோம் என வலியுறுத்தி, அழுத்தம் தந்தது.

அண்மைச் செய்தி :  நாகாலாந்து முதலமைச்சராக 5-வது முறையாக நெய்பியு ரியோ பதவியேற்பு

நிபந்தனையை சங்மா ஏற்காததால், கூட்டணியை விட்டு பாஜக விலகி தனித்து போட்டியிட்டது. ஆனால் தேர்தல் முடிவில் 26 இடங்களை வென்றது சங்மாவின் தேசிய மக்கள் கட்சி. தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது. இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் கான்ராட் சங்மா. பி.ஏ.சங்மா காங்கிரஸை எதிர்த்து குரல் கொடுத்தார் என்றால், மகன் பாஜக வுக்கு அடிபணியாமல் தனித்தன்மயுடன் செயல்படுகிறார் என்றால்  மிகையில்லை.

ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.