தமிழ்நாடு மாணவர்களின் வசதிக்காக CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க திருவாரூர் மத்திய பல்கலை சார்பில் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் 2023 – 24 கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப் படிப்பு, ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு வரும் மே 21-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பபதிவானது http://www.nta.ac.in, https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளங்களின் வாயிலாக கடந்த பிப்ரவரி 9-ம் தேதி துவங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் விண்ணப்பிக்க தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல்கள் உள்ளதன் காரணம் கண்டறியப்பட்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பாக சிறப்பு முகாம்களானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 12-ம் தேதி இறுதி நாளென்பதால் திங்கள் கிழமையான நேற்று முதல் வரும் வெள்ளிக்கிழமை 10 -ம் தேதி வரை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 10 -ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 -ம் வகுப்பு பதிவேட்டில் உள்ள பெயர், பாஸ்போர்ட் சைஸ் அளவிலான மூன்று புகைப்படங்கள் ( ஹார்ட் & சாஃப்ட் காப்பி), சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் வசதிக்காக பழைய மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு முகாம் மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பழைய திருவாரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது. எனவே அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா