“ராகுல் காந்தியே வருக; நாட்டுக்கு நல்லாட்சி தர உமது புரட்சிப் பயணம் வெல்க” எனக் கொடி அசைத்து முதலமைச்சர் ஸ்டாலின், ராகுலின் இந்தியப் பயணத்தை தொடங்கி வைக்க இருக்கிறார் என்று திமுக நாளேடான முரசொலியில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். அதன்பிறகு தமிழகத்துடன் மிகவும் இணக்கமாக இருந்து வருகிறார் ராகுல். 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ளன.
இந்நிலையில், முரசொலி செல்வம் எழுதிய அந்தக் கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
மானிய ஒழிப்பு, தனியார் வங்கிகளை தேசியமயமாக்குதல் போன்ற புரட்சிகரத் திட்டங்களை நிறைவேற்ற முற்பட்ட நேரத்தில் காங்கிரசின் மூத்தத் தலைவர்கள் சிலர் அதற்கு எதிராகச் செயல்பட்டு அந்தச் சட்டங்களை நிறைவேற்றவிடாது செய்திட நினைத்த நிலையில், திமுக, இந்திரா அம்மையாருக்கு ஆதரவுக் கரம் நீட்டியதை யாரும் மறுக்க இயலாது!
திமுகவின் ஆதரவுக்கரம் நீளாமல் இருந்திருந்தால், இந்திரா அம்மையாரின் அரசியல் திக்கு தெரியாது திணறியிருக்கும்! இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய இந்திரா அம்மையாரை அன்று மொரார்ஜி தேசாய் ‘சோக்ரி’ (ஒன்றும் தெரியாத பெண்) என வருணித்தார்.
அதேபோல இந்திரா அம்மையாரின் பேரன் ராகுல் இன்று பிரதமரால் ‘பப்பு’ என்று வருணிக்கப்படுகிறார்! திரைப்படங்களில் வரும் வசனபாணியில் கூறுவதென்றால் ‘சோக்ரி’ யின் ஆட்டம் அன்று முடிந்த நிலையில் இன்று ‘பப்பு’ வின் ஆட்டம் தொடங்க இருக்கிறது!
அன்று ‘சோக்ரி’ க்கு திமுக தலைவர் கைகொடுத்து நின்றார்! இன்று ‘பப்பு’வின் ஆட்டத்துக்கு தளபதி தளம் அமைக்கிறார்!
“நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக!” என சென்னையில் கலைஞர் முழங்கினார்! இன்று இந்த நாட்டின் தென்கோடியில் மீண்டும் அதேபோன்ற ஒரு குரல் ஒலிக்க இருக்கிறது!
“ராகுல் காந்தியே வருக; நாட்டுக்கு நல்லாட்சி தர உமது புரட்சிப் பயணம் வெல்க” எனக் கொடி அசைத்து தளபதி ராகுலின் இந்தியப் பயணத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்தியாவைக் காத்திட, பழம் பெரும் கட்சியின் இளம் தலைவனே வீறு கொண்டு எழுந்து சூறாவளியாய் சுழன்றிடு! உனக்கு உறுதுணையாக உழைப்பின் நாயகன் தளபதி இருக்கிறார்! வெற்றி ஈட்டும் வரை தளராது தொடரட்டும் உன் பயணம்! என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று டெல்லி சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,2024 பொதுத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும், தனக்கு பிரதமர் பதவி மீது எந்த ஆசையும் விருப்பமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








