காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கார்கே மற்றும் சசி தரூர் மனுக்கள் மட்டுமே ஏற்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில், திரிபாதியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி உறுதியாகி உள்ளது.   அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில், திரிபாதியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி உறுதியாகி உள்ளது.

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தான் போட்டியிட போவதில்லை என ராகுல்காந்தி தெரிவித்து விட்டார்.

 

இதையடுத்து, ராஜஸ்தான் முதலமைச்சரும், நேரு குடும்பத்திற்கு நெருக்கமானவருமான அசோக் கெலாட் மீது அனைவரது பார்வையும் திரும்பியது. காங்கிரஸ் தலைமையும் அசோக் கெலாட்டைதான் தலைவராக முன் நிறுத்தும் என செய்திகள் பரவியது. ஆனால் திடீரென கட்சி தலைமை மீது அசோக் கெலாட் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்ததால் அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், மல்லிகார்ஜூனே கார்கே, சசிதரூர் மற்றும் கே.என்.திரிபாதி ஆகிய 3 பேர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஜார்கண்ட் முன்னாள் அமைச்சர் திரிபாதியும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவரான மதுசூதன் மிஸ்ட்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

இதனால் சசி தரூர் மற்றும் கார்கே இடையே நேரடி போட்டி உறுதியாகி உள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரில் ஒருவர் மனுவை வாபஸ் பெறவில்லை எனில் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.