கூண்டோடு ராஜினாமா செய்த காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள்

இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம்; விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது எனத் துரை வைகோவை கூறியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 1993ல்…

இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம்; விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது எனத் துரை வைகோவை கூறியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 1993ல் வைகோ எனும் வை.கோபால்சாமி தனது ஆதரவாளருடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியினை துவக்கி அதற்கான கொடியினை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சியுடன் கூட்டணி இணைந்து பம்பரம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வந்தார்.

தற்போது தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரது மகனான துரை வைகோவை தலைமை கழக நிலையைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவரது செயல்பாடு , பேச்சுகள் பல்வேறு மூத்த நிர்வாகிகளுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட மதிமுக கூட்டத்தில் பேசிய போது, வருங்காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம் எனவும் இதில் விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது எனக் கூறியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் வளையாபதி தனது முகநூல் பக்கத்தில் தான் கடந்த 28ஆண்டு காலமாக மதிமுகவில் நீடித்து வருவதால் இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தலைமை கழகத்திற்குத் தெரிவித்து இருந்தார். இதற்கு வைகோ உடனடியாக அலைபேசியில் பேசி பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டு மதிமுக வலைப் பக்கத்தில் அவர் பதவியை நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மாநில துணை பொதுச் செயலாளர் மு. ராஜேந்திரன் என்பவர் இதற்கு எதிர் பதிலைக் கண்ணிய குறைவாகப் பதிவு செய்வதைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், நகரம் , காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் என 28 பேர் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராகச் செயல்படுவதாகத் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.