பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50 மணிக்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்திற்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறைபாடே காரணம் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை ஆட்சியரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ரயிலை வேகமாக இயக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதுகாப்பில் எந்த கவனமும் செலுத்துவதில்லை. அதனால்தான் இது போன்ற விபத்துக்கள் நடக்கிறது. புல்லட் ரயில், வந்தே பாரத் போன்ற ரயில்களை இயக்க வேண்டுமென்ற குறிக்கோள் இருக்கிறதே தவிர, தண்டவாளங்கள் அதற்கு தகுதியாக உள்ளதா என்பதை பார்ப்பது கிடையாது.
ரயில்வே துறையில் 50,000 காலி பணியிடங்கள் உள்ளது. அதனை நிரப்பாமல் ஒப்பந்த அடிப்படையில் அதை நிரப்புகிறார்கள். அனுபவம் மிக்கவர்கள் 12 மணி நேரத்திற்கு பதிலாக 18 மணி நேரம் பணிபுரியக்கூடிய சூழல் நிலவுகிறது இது கூட விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்த அவர், பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ள நிவாரண தொகைய மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









