அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதனை தொடர்ந்து கட்சியில் மேல் மட்ட தலைவர்களின் வலியுறுத்தலின் பேரில், தற்காலிக தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.
சோனியா காந்தி மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்று, 2 ஆண்டுகள் ஆன நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தலைவர் தேர்வுக்கான தேர்தலை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3வது முறையாகவும் தேர்தலை ஒத்திவைத்து காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.







