திமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வது குறித்து காங்கிரஸ் செயற்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாட்களாக நடக்கிறது. இதுவரை விசிகவுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக்கிற்கு 3, மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை விட குறைவான தொகுதிகளே ஒதுக்க முடியும் என திமுக தெரிவிப்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை காலை 10.30க்கு தொடங்குகிறது. கே.எஸ்.அழகிரி தலைமையில் நடக்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேர்தல் பொறுப்பாளர்கள் வீரப்ப மொய்லி, பள்ளம் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
செயற்குழு உறுப்பினர்களிடம் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் , நாளை நடைபெறவுள்ள திமுகவுடனான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.







