மாணவர் காங்கிரசில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த, எளிய மனிதராக இருந்த மல்லிகார்ஜூன் கார்கே , அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உச்சம் தொட்டுள்ளார் அவர் கடந்து வந்த பாதையைப்பற்றி பார்க்கலாம்.
எளிமையானவர், கடும் உழைப்பாளி, உரிய பதவி கிடைக்கா விட்டாலும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகாத அரசியல் விசுவாசி, ஆர்ப்பாட்டமில்லாத அரசியல்வாதி என பெயரெடுத்தவர் மல்லிகார்ஜூன் கார்கே . கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன் கார்கே, 1942 ஆம் ஆண்டு, ஜூலை 21 ஆம் தேதி பிதார் மாவட்டம் வரவட்டி என்ற ஊரில் பிறந்தார். சட்டம் பயின்றவர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாடீலிடம் பயிற்சி பெற்றார்.
மாணவர் காங்கிரசில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து படிப்படியாக கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ள அனுபவமுள்ள சிறந்த நிர்வாகி. 1972ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கார்கே, மாநில அமைச்சராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 
கர்நாடகாவில், தேவராஜ் அர்ஸ், குண்டு ராவ், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் தரம் சிங் என ஆறு முதலமைச்சர்களிடம் முக்கிய துறைகளின் அமைச்சராக செயல்பட்டுள்ளார். 1999 மற்றும் 2004 ம் ஆண்டுகளில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவைதேர்தலுக்கு பின் , லிங்காயத்து சமுதாய அரசியல் கணக்கில் எஸ்.எம்.கிருஷ்ணாவும் , தரம் சிங்கும் கர்நாடக மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த இரண்டு முறையும் சக போட்டியாளராக இருந்து முதலமைச்சர் வாய்ப்பை நழுவ விட்டவர் மல்லிகார்ஜூன் கார்கே என்பது குறிப்பிடதக்கது. 
பின்னர் 2009 ம் ஆண்டு தேர்தலில் குல்பர்கா தொகுதியில் இருந்து மக்களவை எம்.பியாகி நாடாளுமன்றம் சென்றார். கர்நாடகத்தில் கார்கேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை.ஆனால் கடும் உழைப்பாளியான கார்கேவை காலம் கைவிடவில்லை. முதலமைச்சர் பதவிக்கு இணையானதாக சொல்லப்படும் மத்திய கேபினட் அமைச்சர் பதவி, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கார்கேவை தேடி வந்தது. தொழிலாளர் நலத்துறை மற்றும் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். 
2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவராக இருந்தார்.தோல்வியையே காணாதவரான கார்கே , 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் முதல் முறையாக தோல்வியடைந்தார். அனுபமுள்ள சிறந்த தலைவரான கார்கேவை மாநிலங்களவை எம்.பியாக்கியது காங்கிரஸ் கட்சி. குலாம் நபி ஆசாத்துக்கு பின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் திறம்பட செயலாற்றியவர்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குறித்து கலகக்குரல் எழுப்பிய ஜி-23 தலைவர்களில் ஒருவரான சசி தரூர் தான், கார்கேவை எதிர்த்து போட்டியிட்டவர். ஆனாலும் ஜி-23-யின் பெரும்பான்மையான தலைவர்களும், சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான தலைவர்களும் கார்கேவை ஆதரித்தனர்.
80 வயதைக் கடந்த மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணைப்பிரதமரும், விடுதலைப்போராட்ட வீரருமான ஜெகஜீவன் ராமுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவரான இரண்டாவது தலித் சமுதாய தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
முன்பாக , தென்னிந்தியாவில் இருந்து சேலம் விஜயராகவாச்சாரி, சரோஜினி நாயுடு, எஸ்.சீனிவாச அய்யங்கார், பட்டாபி சீதாராமையா, நீலம் சஞ்சீவி ரெட்டி, கே.காமராஜர் மற்றும் நிஜலிங்கப்பா என இதுவரை ஏழு பேர் காங்கிரஸ் கட்சியின் உயரிய பதவியான தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். தென்னிந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் எட்டாவது தலைவர் கார்கே. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் 62 வது தலைவர் என்ற பெருமைக்குரியவராகவும் கார்கே இருப்பார். 
காங்கிரசை ஆரம்பித்த ஏ.ஓ. ஹியூம் முதல் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி, மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு, காமராஜர் போன்ற அரிய தலைவர்கள் அலங்கரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் இருக்கையில் அமரும் கார்கே, மீண்டும் ஒரு சோதனையான காலத்தில் காங்கிரஸ் கட்சியை வழி நடத்தும் வரலாற்றுக்கும் உரியவராகவும் மாறி இருக்கிறார்.
- ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்









