11 வயது சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சர்ச்சைய ஏற்படுத்திய நிலையில், அவரது பெற்றோரே இந்த செயலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா, வாலிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட
கவுண்டப்பனூர் கிராமத்தில் இரு தரப்பினர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த மது விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
24 மணி நேரமும் இந்த மது விற்பனை நடப்பதால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிகாலை முதலே இங்கு வந்து குடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். மது குடிக்க வரும் நபர்களால் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர். குடித்துவிட்டு ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதும், பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதுமாக உள்ளனர். கூலிவேலைக்கு செல்லும் மது அருந்துவோர் அதிகாலையிலேயே இங்கு வந்து மது குடித்துவிட்டுதான் செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கவுண்டப்பனூர் கிராமத்தில் ஆற்றின் ஓரம் குடில் அமைத்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்த பெற்றோர்கள் தற்போது தங்களது 11 வயது மகனையும் மது விற்பனையில் ஈடுபடுத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மல்லானூர் கிராமத்தில் தங்கி 5ம் வகுப்பு படித்து வந்த சிறுவனை பெற்றோர்கள்
படிப்பை நிறுத்தி விட்டு மது விற்பனையில் ஈடுபடுத்தி உள்ளனர். மேலும் பெற்றோர்கள் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதால், கடையில் அமர்ந்து விற்பனை செய்வதற்காக சிறுவனை பயன்படுத்தி உள்ளதும் தெரியவந்துள்ளது.

கள்ளச் சந்தையில் மது விற்பனையை கட்டுபடுத்த வேண்டிய மதுவிலக்கு அமலாக்க துறையினர், சட்டம் ஒழுங்கு போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தகவல் தரவேண்டிய மாவட்ட சிறப்பு பிரிவு போலீசாருக்கும் மாமூல் சென்று விடுவதால் அவர்களும் கண்டு கொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் மது விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது. இருதரப்பினரும் மது விற்பதால் எந்த நேரத்திலும் மோதல் ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். போலீசார் சோதனைக்கு வந்தாலும் சிறுவன் விற்பனை செய்வதால் அவனை போலீசார் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள் என்பதாலும் இந்த யுக்தியை மதுவிற்பனை செய்யும் தம்பதிகள் கடைபிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லவேண்டிய சிறுவன் இப்போதே மது வியாபாரியான அவலம் ஏற்பட்டுள்ளது.







