முக்கியச் செய்திகள் தமிழகம்

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் யார் என்ற கேள்வி வலுவாக எதிரொலிக்க ஆரம்பித்தது. செல்வப்பெருந்தகை, விஜயதாரணி, முனிரத்தினம் ஆகியோர் சட்டமன்ற குழுத் தலைவருக்கான போட்டியில் இருந்தனர்.

மற்ற அனைத்து கட்சிகளும் சட்டமன்ற குழுத் தலைவரை அறிவித்துவிட்ட போதிலும் காங்கிரஸில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இரண்டு முறை நடந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். துணைத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினத்தோர் அணித் தலைவராக பொறுப்பு வகித்து வரும் செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னதாக விசிக சார்பில் 2006ஆம் ஆண்டு மங்களூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தமிழக அமைச்சர்கள் நேற்றிரவு திடீர் சந்திப்பு!

Nandhakumar

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபிலும் இரவு ஊரடங்கு!

Karthick

தடுப்பூசி என்றால் பக்க விளைவுகள் இருக்கும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

Saravana