மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில்
பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடகா கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏலம் விட
வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக கடந்த 17 வருடங்களாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள 11,344 சேலைகள், 750 ஜோடி காலணிகள், சால்வைகள் போன்ற 27 வகையான பொருட்களை ஏலம் விட்டு அதில் வரும் நிதியை கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கிற்கு செலவிட்ட தொகையை ஈடு செய்ய வேண்டுமென பெங்களூர் சிட்டி சிவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி 2022 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மாநகர சிவில் மற்றும் செஷன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி மனுவில் முகாந்திரம் உள்ளது என கூறி நீதிபதி ராமச்சந்திர டி ஹூத்தார் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த தீர்ப்பில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு சரியானது எனவும் உடனடியாக கர்நாடகா அரசு மற்றும் நீதித்துறை சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அனைத்து சொத்துகளையும் ஏலம் விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இன்று கர்நாடக அரசு சொத்து குவிப்பு
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 வகையான பொருட்களை ஏலம் விடுவதற்கு கிரண் எஸ் ஜவாலி என்ற வழக்கறிஞரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.







