தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொற்கையில் நடைபெறும் அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கிய அகழாய்வு பணிகள் 5 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதற்காக கொற்கை மற்றும் மாறமங்கலம் பகுதிகளில் 17 குழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழாய்வின்போது ஏற்கனவே 10 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம், 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருள் வடிகட்டும் குழாய் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சங்கு வளையல்கள், 4 சங்கு மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சுடுமண் மணிகள், பச்சை, ஊதா, மஞ்சள் நிற கண்ணாடி மணிகள், கருப்பு நிற கண்ணாடி வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த பகுதிகளில் சங்கு அறுக்கும் தொழில் கூடம் இருந்திருக்க கூடும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








