நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருப்பதையொட்டி வரும் 28-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரானது வரும் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 19 அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது, எதிர்கட்சிகளை பொறுத்தவரை நாட்டின் பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை உயர்வு, காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள், லக்கிம்பூர் வன்முறை, கிரிப்டோ கரன்சி, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பக்கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்டத்தொடருக்கு முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தின்போது, குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சியினருடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார். ஏனெனில் கடந்த மழைகால கூட்டத்தொடரின்போது, பெகாசஸ் உளவு விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி நாடாளுமன்ற அலுவல்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதால் அம்மாநிலங்கள் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.







